ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு.... குழந்தைகளுடன் தாய் தற்கொலை..... கணவர் மாயம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இவர்களுடைய வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மோகனப்பிரியா தன்னுடைய குழந்தைகளுடன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரேம்ராஜ் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ஒரு ஆன்லைன் செயலி மூலமாக கடந்த 10 நாட்களில் நான் 50 லட்சம் ரூபாய் வரை ஏமாந்து விட்டேன். இதை எனக்கு யாரிடமும் சொல்ல தைரியம் இல்லை. எனவே நாங்கள் நான்கு பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் பிரேம் ராஜ் மாயமாகிவிட்டார். அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா இல்லையெனில் கொலை செய்யப்பட்டனர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
No comments