அரியலூர்: கல்லூரியில் சீட்டு பெற்றுத்தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(38). இவர், கடந்த 2009-ம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்பிஏ பயில, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ்(46) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, தனியார் கல்லூரில் சேர ரூ.4.5 லட்சம் தரும்படி தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொன்னுசாமி, ரமேஷிடம் ரூ.4.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், சீட் வாங்கி தருவதாக கூறி பொன்னுசாமியை அலைக்கழித்து ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவில் பொன்னுசாமி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் ரமேஷை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண் 1) நீதிமன்றத்தில் நேற்று இரவு (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா, குற்றவாளி ரமேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் ரமேஷ் அடைக்கப்பட்டார்.
No comments