திருக்குவளை அருகே கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மேளதாளங்கள் முழங்க கல்வி சீர் வரிசை வழங்கினர்


நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொடியாலத்தூர் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை  அனைத்தையும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள்  சார்பில் கல்வி சீராக வழங்க திட்டமிட்டனர். 

அதன்படி  பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்இடி டிவி,சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ், உள்ளிட்ட 3லட்சம் மதிப்பீலான  பொருள்களை வீட்டு விசேஷத்திற்கு சீராக கொண்டு போவது போல எடுத்துச் சென்று அசத்தியுள்ளனர். கொடியாலத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சீர்வரிசை பொருள்கள் பள்ளிக்கு எடுத்துவரப்பட்டது. 

கல்வி சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வை கீழ்வேளூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் இரா.அன்பழகன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மு. ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஜி.குருமூர்த்தி, கொடியாலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ரேவதிஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் மீ. கல்பனா வரவேற்றார். பள்ளி ஆசிரியர் கோ.வைரப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். 



பள்ளிக்கான இடத்தை தானமாக வழங்கிய கும்பகோணம் டி.எஸ். சுவாமிநாத உடையார்  குடும்பத்தினருக்கு கீழ்வேளூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் வே. சிவக்குமார் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் பங்கேற்று பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். முன்னதாக பொன்விழா கல்வெட்டினை நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எம். துரைமுருகு திறந்து வைத்தார்.



பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி  ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொன்விழா நிர்வாக குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வினை பொன்விழா அமைப்பின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் என்.சுதா நன்றி கூறினார்.

கீழ்வேளூர் தாலுகா ரிப்போர்ட்டர் த.கண்ணன்

Post a Comment

0 Comments