வீட்டு வேலைக்கு சென்ற போது 35¾ பவுன் நகையை திருடிய பெண்
ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெண் நுழைந்த மூன்றே நாட்களில் 35¾ பவுன் நகையை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. பல்கீஸ் பேகம் ஈரோட்டில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நியாஸ் பாஷா வியாபாரத்துக்காக அடிக்கடி வெளியூர் செல்லக்கூடியவர். எனவே அவரது தந்தையை பார்த்துக்கொள்ளவும், வீட்டு வேலைக்காகவும் மார்ச் 1-ம் தேதி ஜாஸ்மினை வேலைக்கு வைத்தனர்.
ஜாஸ்மின், வீட்டிலேயே தங்கி இருந்து வேலை செய்துவர, கடந்த 4-ம் தேதி பல்கீஸ் பேகம் பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது, ஜாஸ்மினை காணவில்லை. மேலும் பீரோவில் வைத்திருந்த 35¾ பவுன் நகையும் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சூரம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜாஸ்மின் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் என்றும், நகைகள் வைக்கப்பட்ட இடத்தை முன்னமே தெரிந்து வைத்து கொண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகையை திருடி விட்டு தப்பியோடியதும் உறுதி செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் கன்னிவாடிக்கு சென்று ஜாஸ்மினை கைது செய்தனர். பின்னர் ஜாஸ்மின் திருடிய நகையிலிருந்து 20½ பவுன் நகை மீட்கப்பட்டதுடன், மீதமுள்ள நகையை விற்ற பணத்தில் வாங்கிய கார் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கமும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments