நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம்.... காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம்.... கைதான மோசடி கும்பல் தகவல்
கோவையில் பல கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஹாஸ்பே நிறுவனம் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தியிருந்தது. இதைபோல் நிறுவனத்தை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களுக்கு சொகுசு கார்கள் பரிசாக வழங்குவதற்கு பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கோவையைச் சேர்ந்த ஹாஸ்பே நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது.
முதலீட்டாளர்களை நம்ப வைக்க விளம்பரங்களில் பிரபல நடிகைகளை களம் இறக்கியுள்ளது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்களை அந்த நிறுவனத்தினர் பங்கேற்க வைத்துள்ளனர்.அதன்பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் விழா நடத்தியதுடன், பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த ஏராளமானோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளார்கள்.
இதனால் உண்மை என்று நம்பி பலர் பணம் செலுத்தி உள்ளனர்.இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளார்கள். ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு 'ஹாஷ்பே' நிறுவனத்தால் பணத்தை கொடுக்க முடியவில்லை.. நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி பணத்தை கொடுக்க முடியாமல், அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர்.
எனினும் ஹாஷ்பே நிறுவன வங்கி கணக்கில் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு மோசடி கும்பல் ஜாலியாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன் 98 லட்சம் ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரில் புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை தேடி வந்த போலீசார், கோவையில் நட்சத்திர ஓட்டலில் மோசடியில் தொடர்புடைய 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின், 40 வயதாகும் அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்தது. அங்கு அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது உண்மையா, இல்லையா என்பதை அவர்கள் விளக்கம் அளித்தால் மட்டுமே தெரியவரும். இதனிடையே இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு புதுச்சேரி போலீசார் சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments