என்ன தகப்பா இதெல்லாம்..... ஒவ்வொருவர் பெயரிலும் 1.94 லட்சம் கடன்..... பகீர் கிளப்பிய பாமக
2030-ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்லை எனவும், அரசின் நேரடிக் கடன் ரூ. 9.55 கோடி, மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும் என பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதி நிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வருகிறது, இந்நிலையில், நடப்பாண்டு முதல் பொருளாதார ஆய்வறிக்கையையும் வெளியிடுகிறது. இந்நிலையில், பாமகவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது.அதில், 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கக்கூடும். நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1,23,970.01 கோடியாக அதிகரித்திருப்பதால், நடப்பாண்டில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்த மொத்த வருவாய் வரவு இலக்குகளை கிட்டத்தட்ட எட்டிவிட முடியும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதால், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பங்கு ரூ.49,754.95 கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.52,491 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழக அரசின் வருவாய் எந்த வகையிலும் குறையாது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது, போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் மானியம் ஆகியவற்றால் அரசின் செலவுகள் ரூ.7000 கோடி வரை உயரும்.
2024-25ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான ரூ.49,278.73 கோடியை விட அதிகரிக்கக்கூடும். 2025-26ஆம் ஆண்டில் ரூ.1218.08 கோடி வருவாய் உபரி எட்டப்படும் என்று திமுக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 13&ஆம் ஆண்டாக 2025-26ஆம் ஆண்டிலும் வருவாய்ப் பற்றாக்குறை நீடிக்கும். அந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.50,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும். 2026-27ஆம் ஆண்டில் ரூ.5966.67 கோடி வருவாய் உபரி இலக்கையும் எட்ட முடியாது.2025-26ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.20 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது. 2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1,55,584.48 கோடியாகவும், நிகரக் கடன் அளவு ரூ.1,05,945.66 கோடியாகவும் இருக்கும். 2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசு அதன் கடனில் ரூ.49,638 கோடியை திருப்பிச் செலுத்தும். 2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1.65 லட்சம் கோடியாக இருக்கும். 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அதன் கடனுக்கான வட்டியாக மட்டும் குறைந்தது ரூ.75,000 கோடியாக அதிகரித்திருக்கும்.
31.03.2026ஆம் நாள் நிலவரப்படி தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும். தமிழக அரசின் நேரடிக் கடனில் ரூ.7.90 லட்சம் கோடி மாநில வளர்ச்சிக் கடன் என்ற பெயரில் பத்திரங்களை வெளியிட்டு பெறப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.1.65 லட்சம் கோடி பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட கடனாகவும் இருக்கும். ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன். தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் தவிர மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.5.50 லட்சம் கோடியாக உயரக்கூடும்.தமிழகத்தின் மொத்தக் கடன் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் ரூ. 15.05 லட்சம் கோடியாக இருக்கும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை இப்போது 7.73 கோடியாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,94,695 கடன் பெறப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.78 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
No comments