• Breaking News

    பங்குனி மாத பூஜை..... சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு.... தரிசன முறையில் மாற்றம்

     


    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்கள் கூறியதாவது:-

    பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும். மேலும் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1 முதல் 8 கிராம் அளவிலான தங்க டாலர்கள் ஏப்ரல் மாதம் விஷூ பண்டிகையையொட்டி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு சபரிமலை நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெறும். மே மாதம் சர்வதேச அய்யப்ப சங்கமம் பம்பையில் 2 நாட்கள் நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அய்யப்ப பக்தர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்பட 1,250-க்கும் மேற்பட்ட கோவில்களில் வழிபாட்டு கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்த கேரள ஐகோா்ட்டு அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments