திருக்குவளை அருகே மாடு இறப்பில் சந்தேகம்..... காவல் நிலையத்தில் புகார்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் ஊராட்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஏ.டி.வைத்தியலிங்கம். இவர் நேற்று தன்னுடைய நாட்டு பசு மாட்டை காணவில்லை என்றும், தேடிப் பார்த்த போது தெற்கு வெளி வாய்க்காலில் இறந்து கிடந்ததாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கால்நடை மருத்துவர்கள் 2 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாட்டின் உடல் உறுப்புகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளிவந்த பிறகு, பசு மாட்டின் மரணம் குறித்த உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பசு மாட்டின் உரிமையாளர் வைத்தியலிங்கம் கூறுகையில், பசு மாட்டின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. வேறு பகுதியில் கட்டியிருந்த மாடு, இந்த பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு வந்து வாய்க்காலில் விழுந்தது? எப்படி என்று தெரியவில்லை. மர்மமாக இருக்கிறது. யாரோ திட்டமிட்டு மாட்டினை கொன்று இருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments