• Breaking News

    நாகை அருகே அரசு பள்ளியில் வரலாற்று சிறப்புகளை பிரதிபலிக்கும் தொல்லியல் மரபு பொருட்களின் கண்காட்சி


    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம், ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில்  கண்காட்சி இன்று நடைபெற்றது.பழங்காலத்து நாணயங்கள்,ஓலைச்சுவடிகள்,வரலாற்று சிறப்புகளை பிரதிபலிக்கும் சின்னங்களை  பள்ளி ஆசிரியரான சிவகுமார் காட்சிப்படுத்தியிருந்தார். பழமையும் தொன்மையும் மாறா வண்ணம் இளந்தலைமுறையினரும்  அவற்றைக் கற்று தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்ட இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து நில நிர்வாகத்துறையின் துணை ஆட்சியர் ராமச்சந்திரன் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் தொல்லியல் மரபுகள் குறித்து சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள் பயன்படுத்திய பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் ஆகியவை அரங்கம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது மாணவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியரும் தொல்லியல் மன்ற தலைவருமான சா. தங்கராஜ் தலைமை வகித்தார். நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தொல்லியல் மரபு மன்ற ஒருங்கிணைப்பாளரும் பள்ளி ஆசிரியருமானர் நீ. சிவக்குமார் வரவேற்றார்.

     நாகை துறைமுகம் மேம்பாட்டு குழும தலைவர் என். சந்திரசேகரன், கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தனியார் பள்ளி கூட்டமைப்பு மண்டல தலைவர் கே. அருண்குமார், கீழ்வேளூர் தனியார் பள்ளி தாளாளர் ஜெரோம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிறைவாக தொல்லியல் மரபு மாணவர் மன்ற குழு தலைவர் ஜெ.லெ.சந்தியா நன்றி கூறினார்.

    No comments