விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர்கள்..... கட்டு கட்டாக கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மீட்பு பணிக்காக வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆதிசேஷன் காயமடைந்து மயக்க நிலையில் இருந்தவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டுள்ளார்.
உடனடியாக காயம் அடைந்தவர்களையும் அவர்களின் உடமைகளையும் மீட்டுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்றிய ரூ 5 லட்சத்து 62 ஆயிரத்து 60 ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதில் பொறுப்புடன் நேர்மையாக கடமையாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியருக்கு காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
No comments