• Breaking News

    நாகை: தாளடி சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்...... டீசல் இன்ஜின் கொண்டு பாசன வாய்க்கால்களில் தேங்கியிருக்கும் நீரை இறைத்து பயிரைக் காப்பாற்றும் அவலம்



    நாகை மாவட்டத்தில் இந்தாண்டு  ஒருபோக சாகுபடியாக சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில் குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் அதன் பிறகு தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

    கடந்த மாதம் மேட்டூர் அணை மூடப்பட்ட நிலையில் ஆற்றில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் நீரை எதிர்த்து பயிரை காப்பாற்றும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட இறையான்குடி,பாலக்குறிச்சி,எட்டுக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார்  200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் செய்யப்பட்டுள்ள தாளடி சாகுபடி பயிரைக் காப்பாற்ற டீசல் இன்ஜின் மூலம் விவசாயிகள் நீரை இறைத்து வருகின்றனர்.


     மேலும் தற்பொழுது  கோடை வெயில் வழக்கத்திற்கு மாறாக சுட்டெரித்து வரும் நிலையில் கதிர்கள் கருகி அபாயம் இருப்பதாகவும், மழை பெய்வதற்கான சாத்தியகூறு  இல்லாத நிலையில் தற்பொழுது வாய்க்காலில் எஞ்சியுள்ள நீரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2000-3000 வரை வாடகை கொடுத்து எஞ்சின் மூலம் இறைத்து வருவதாகவும், மறுமுறை நீர் வைப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். 


    ஏற்கனவே குறுவை சாகுபடி செய்து மழை காரணமாக பெரிதும் பாதித்த நிலையில் தற்போது தாளடி சாகுபடியும் நீரில்லாமல் வறட்சியால் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் 40-50 நாட்கள் வயதுடைய பயிரை காப்பாற்ற தமிழக அரசு தேவையான தண்ணீர் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments