நடைபாதையில் சிறுத்தைகள்.....திருப்பதி தேவஸ்தானம் விதித்த புது கட்டுப்பாடுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபுரி வழியாக நடைபாதையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபுரியிலிருந்து நடைபாதையின் 7-வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடைபாதையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அதன்படி அலிபுரியிலிருந்து திருமலைக்கு நடந்த செல்லும் பக்தர்கள் வழக்கம் போல தனியாகவோ குழுக்களாகவோ அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகின்றார்கள்.
அதன் பிறகு பக்தர்கள் குழுக்களாக கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்க வேண்டும் எனவும், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை எனவும், இரவு 10 மணிக்கு நடைபாதை மூடப்பட்ட நிலையில் இனிமேல் 9:30 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்குதலில் ஒரு சிறுமி இறந்ததாகவும், மற்றொரு குழந்தை படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கும் அதிகாரிகள் நடைபாதையில் குழந்தைகளின் அனுமதி குறித்து சிறப்பு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளனர். அப்பகுதியை ஒட்டி பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பக்தர்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியும் வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் பக்தர்களுக்கு அலிபுரி டோல்கேட்டில் ‘பாஸ் டேக்’ மூலம் சுங்க கட்டணம் பெறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக கூகுள் பே, போன் பே மூலமாக பணம் செலுத்தும் படி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நேரமும் வீணாகின்றது. ஆகவே மீண்டும் பாஸ் டேக் மூலம் வாகன கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments