• Breaking News

    கேரளா அரசை கண்டித்து விவசாய சங்கத்தினருடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இணைந்து எல்லையை முற்றுகையிடும் போராட்டம்


    தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியார் அணையை பற்றி  கேரளா அரசும், கேரளாவில் உள்ள தனியார் அமைப்புகளும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை காட்டி  அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

    இதனை கண்டிக்கும் விதமாகவும், உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த வேண்டும் என கோரியும், முல்லைப் பெரியாறு அணையில் 15 2 அடி தண்ணீர் தேக்க கோரியும் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்பில் தமிழக கேரளா எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்தில் தேனி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த முற்றுகைப் போராட்டமானது லோயர் கேம்ப் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக தமிழக கேரளா எல்லையான குமுளி நோக்கி சென்றனர்.

    செல்லும் வழியில் கர்னல் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபம் முன்பாக அதிகளவில் போடப்பட்டிருந்த காவல்துறையினர் குமுளியை நோக்கி சென்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோசங்கள் இட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையில் வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் வைகை பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலைந்து சென்றனர்.இந்த முற்றுகை போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தமிழக கேரள எல்லைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    No comments