• Breaking News

    நாகையில் வெளிப்பாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு

     


    நாகப்பட்டினம் நகராட்சி, வெளிப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட குளிர்பானத்தை, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த குளிர்பான பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் எண் உள்ளிட்ட எந்தவொரு விபரமும் இல்லாததால், அவற்றை கைப்பற்றி அழிக்க நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகனுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று ( 06.02.25 ) ரூபாய் இரண்டாயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி, குளிர்பானத்தை தயாரித்து விநியோகம் செய்த நபருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


    வெயில் காலம் துவங்கவுள்ள நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் அடைக்கப்பட்ட குளிர் பானங்களில் முழுமையான தயாரிப்பு விபரங்கள் இருக்க வேண்டும் எனவும் மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குளிர்பானங்கள் கைப்பற்றப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. 

    உணவு விற்பனை தொடர்பான புகார்களை மாநில உணவு பாதுகாப்பு ஆணையரக வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 -இல் தெரிவிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

    No comments