• Breaking News

    எனது உயிருக்கு ஆபத்து.... கோவை மத்திய சிறை கைதி பேசும் வீடியோ வைரல்

     


    கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என, 3000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மத்திய சிறையில், சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகத்தால் நடத்தப்படும் தொழிற்சாலை, தோட்டம், பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடை என பல்வேறு பணிகள் அளிக்கப்படுகின்றன. கைதிகள் இணைந்து சைக்கிள், ஆட்டோ தயார் செய்துள்ளனர். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கோவை மத்திய சிறையின் இன்னொரு முகம், வெளி வர துவங்கியுள்ளது.

    சிறையில் உள்ள கைதிகள் தாக்கப்படுகின்றனர்; பல விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்ற புகார்கள்தான் அந்த இன்னொரு முகம்.

    உதாரணத்துக்கு, சமீபத்தில் கோவை, வெள்ளலுாரை சேர்ந்த புருஷோத்தமன், 59 என்பவர் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்ற போது, அங்கிருந்த உதவி ஜெயிலர் விஜயராஜ் அவரை, 'உன்னை ஜெயிலுக்குள்ளேயே வைத்து ஒரு வழி பண்ணுகிறேன் வா' என கொலை மிரட்டல் விடுத்ததாக, புகார் மனு அளித்தார்.ஜெயிலுக்குள் ஏற்படும் மரண சம்பவங்கள் மர்மமாகவே உள்ளன. சமீபகாலமாக சிறையில் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது, கண்ணாடியில் தானாகவே மோதிக்கொண்டு காயப்படுவது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஏசுதாஸ், 33 என்ற கைதி, சிறை கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்து சென்றனர்.

    பிரேத பரிசோதனையில், அவரின் கழுத்து எலும்பு உடைந்திருந்தது. இதனால் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்டாரா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மூன்று முதல் நான்கு பேர் தாக்கியதில், அவர் கழுத்து எலும்பு உடைந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் நான்கு சிறை போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விக்ரம், 29. இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஒரு பிரச்னையில் ராஜலிங்கம், காசிராஜன் ஆகிய இருவரை கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் தனது வக்கீலிடம் வீடியோ காலில், 'என்னுடன் அடைக்கப்பட்டிருந்தவரை கொலை செய்து விட்டனர். அடுத்து நான் தான். எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு சிறை காவலர்கள் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன்ராம் ஆகியோர் தான் காரணம். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,' என பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

    சிறை எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''அப்படி நடக்க வாய்ப்பில்லை. அவர் வீடியோ காலில் பேசும் வீடியோவை வைத்து, 'எடிட்' செய்து தவறாக பரப்பியிருக்க வாய்ப்புள்ளது. முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

    சிறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 'சிறைவாசிகள் தங்களின் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதியை, தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் படி, ஒவ்வொரு சிறைவாசியும், மாதம் 10 முறை பேச அனுமதிக்கப்படுகின்றனர். விக்ரம், சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் வீடியோ கால் செய்து, தவறான தகவல்களை வக்கீலிடம் தெரிவித்திருக்கலாம். அவருக்கு சிறை வளாகத்தில் எந்த துன்புறுத்தலும் ஏற்படவில்லை' என்றார்.

    என்னதான் பூசி மெழுகினாலும், சிறையில் இருந்து வெளியே வரும் கைதிகள் கூறும் கதைகளும் காண்பிக்கும் தழும்புகளும் உள்ளே நடப்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

    No comments