• Breaking News

    ஊடகங்களில் பகிரங்க கருத்து..... காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப் பெருந்தகை எச்சரிக்கை

     


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு சென்று 15 மாவட்ட செயலாளர்கள் புகார் கொடுத்தனர். சமீபத்தில் திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வபெருந்தகை புகழ்ந்த நிலையில் காமராஜர் ஆட்சியை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் செல்வப் பெருந்தகை எங்கெல்லாம் நல்லாட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காமராஜர் ஆட்சி தான் என்று கூறியதோடு மாணிக்கம் தாகூர் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என்றார்.

    பிரியங்கா காந்தியை நேரில் சென்று சந்தித்து செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது செல்வப் பெருந்தகை நிர்வாகிகளை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயங்கள் குறித்து பொது ஊடகங்களில் பகிரங்கமாக கருத்து கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அதை கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்வது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. அத்தகைய நடைமுறைக்கு முற்றிலும் மாறாக ஊடகங்களின் மூலமாக கருத்து கூறுவதையும், விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

    அதே நேரத்தில் என் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது. அவை கட்சி விரோத நடவடிக்கைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    No comments