• Breaking News

    ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை..... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

     




    கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த எஸ்.டி சிவஞானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

    இதனால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை வன சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. கடந்த சிவராத்திரி விழாவில் 7 லட்சம் பேருக்கு மேல் ஈஷா யோகா மையத்தில் திரண்டதால் கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமின்றி விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியது. மேலும் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவைவிட அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது.

    எனவே சிவராத்திரி விழாவை நடத்தக் கூடாது என ஈஷா யோகா மையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுவை குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது. மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

    No comments