கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு செல்லுங்கள்..... அண்ணாமலை சுளீர்
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் 2000 கோடி கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு கூறிவிட்டது. ஆனால் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு கூறி வருகிறது. அதோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் நிலையில் திமுகவினர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள ஹிந்தி பெயர் பலகைகளை கருப்பு மை பூசி அழிக்கிறார்கள். இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது,புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கல்விக் கொள்கையை ஹிந்தி திணிப்பு என்று கூறுகிறார்கள். அதன்பிறகு ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு சில கும்பல் கருப்பு பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு சுற்றி திரிவதை பார்க்கிறோம். தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக திறமை போன்ற பிரச்சனைகளை மடை மாற்றுவதற்காக தமிழ்நாட்டில் காலம் காலமாக உள்ள அதே மொழி அரசியலை தற்போது கையில் எடுத்துள்ளனர்.
கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி திரியும் கும்பல் அப்படியே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டும். இந்த அலுவலகங்களின் முகவரிகளை அடிக்கடி அங்கு செல்லும் அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் திமுக குடும்பத்தினருக்கு ஒரு நியாயம் மக்களுக்கு மட்டும் ஒரு நியாயமா என்று கூறினார்.
No comments