முட்டையை விரும்பி சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகம். குப்பையிலும், செடிகளுக்கு உரமாகவும் போடப்படும் முட்டை ஓட்டில் பயன்கள் அதிகம் உள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. முட்டை ஓடுகள் உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவும் என்பதை சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.
முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்ஸிபடைட் உற்பத்தி செய்வதற்கான காப்புரிமையை இந்த குழு பெற்றுள்ளது. ஹைட்ராக்ஸிபடைட் என்பது சாதாரண எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் ஒரு கால்சியம் பாஸ்பேட் கனிமமாகும். இது எலும்பு தாது மற்றும் பற்களின் மேட்ரிக்ஸை உருவாக்குகிறது.
முட்டை ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை எலும்பு முறிவு, பல் மற்றும் எலும்பியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தலாம். 450க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் ஆராய்ச்சி குழுவினர் சோதனை நடத்தி உள்ளனர். முட்டை ஓடுகளில் 94% கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில், முட்டை ஓடுகளின் ஆண்டு உற்பத்தி கிட்டத்தட்ட 91 மில்லியன் டன்கள் ஆகும்.
2023-24ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் 18% ஆந்திராவில் இருந்தும், 16% தமிழகத்தில் இருந்தும் கிடைக்கின்றன. முட்டை ஓடுகளில் இருந்து கிடைக்கும் ஹைட்ராக்ஸிபடைட்டை எலிகள், முயல்கள் மற்றும் பன்றிகளுக்கு எலும்பு பிரச்னைகளுக்கு சோதித்து பார்த்துள்ளனர். இப்போது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், அறுவை சிகிச்சை நிபுணருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
ஹைட்ராக்ஸிபடைட்டை பயன்படுத்தி 450 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டது. நாட்டில் 42 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனால் புதிய எலும்பை உருவாக்கவும், எலும்பு முறிவு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முடிகிறது. இதனால் எலும்பு முறிவுக்கு தீர்வு காண செய்யப்படும் சிகிச்சையின் செலவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். என்றனர்.
ஆராய்ச்சி குழுவினர் கூறியதாவது: முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்ஸிபடைட்டை உருவாக்கும் செயல்முறைக்கு காப்புரிமை கிடைத்துவிட்டது. ஒரு கிலோ முட்டை ஓடுகளிலிருந்து ஒரு கிலோ ஹைட்ராக்ஸிபடைட்டை உருவாக்க முடிகிறது. இதில் இருந்து கால்சியம் பாஸ்பேட் தயாரிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம் என்று தெரிவித்தனர்.
முட்டை ஓட்டில் கால்சியம் மட்டுமன்றி புரோட்டீன், ப்ளூரைட், மெக்னீசியம், செலீனியம் போன்ற மைக்ரோ ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஒரு கிராம் முட்டை ஓட்டில் தோராயமாக 400 மில்லிகிராம் கால்சியம் உள்ளது என ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments