பாலக்குறிச்சி: நீர்த்தேக்க தொட்டியில் பெண்கள் காலி குடங்களுடன் ஏறி நூதன போராட்டம்
நாகை மாவட்டம்,பாலக்குறிச்சி ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் காலி குடங்களுடன் ஏறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், பாலக்குறிச்சி ஊராட்சியில் சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியினருக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர், ஒரு வருட காலமாக வரவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடுகச்சேரி பகுதியில் உள்ள கிணற்றின் மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு தண்ணீர் அவ்வப்போது விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கோடை காலம் துவங்கும் சூழலில் நீர்நிலைகள் வறண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத காரணத்தால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் பாலக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகாமையில் உள்ள தரைமட்ட தொட்டியின் மீது காலிக்குடங்களுடன் ஏறி கண்டன கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் கிடைக்காததால் தங்களுடைய அன்றாட வேலை கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தண்ணீர் கிடைக்காத நிலையில் பழுதடைந்த நீர் தேக்கத்தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments