நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..... நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த ஹெலின் ரோனிகா ஜேசுபெல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டம் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இப்பள்ளியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்த பணியிடத்தில் நான் நியமிக்கப்பட்டேன்.
எனது நியமனத்தை அங்கீகரிக்க பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.ஆனால் பல காரணங்களை கூறி என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்க 2023ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எனது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித் துறை செயலர், இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி ஏற்கனவே விசாரித்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசுக்கு ஒரு வாரம் சாதாரண சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி பிப்.26-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இந்நிலையில் நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு அரசு வழக்கறிஞர் ஆஜராகி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. இதனால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சின்னராசுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு வாரம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments