அம்மாபட்டினம் அருகே இருந்த ராட்சத கதண்டு கூட்டை தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கையை ஏற்று பாதுகாப்பாக அகற்றிய தீயணைப்பு துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே ஒட்டாங்கரை கிராமத்தில் 4 மாதங்களுக்கு மேலாக உள்ள மிகப்பெரிய கதண்டு கூட்டை அகற்ற வேண்டும் என ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக கதண்டு கூட்டை அகற்றினர்.
கதண்டு கூடு உள்ள பகுதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும், ஒட்டாங்கரை கிராம குடியிறுப்புகளுக்கு செல்லும் வழியாகவும் இருந்தது. மேலும் கண்மாய்களுக்கு குளிக்க வருபவர்களும், வயலுக்கு செல்லக்கூடியவர்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயத்துடன் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பான முறையில் இந்த கதண்டு கூட்டை அப்புறப்படுத்தி தருமாறு கடந்த செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக கதண்டு கூடு அகற்றப்படும் என தீயணைப்பு துறையினர் உறுதி அளித்தனர். ஆனால் மகா சிவராத்திரியை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவிலில் இரண்டு நாட்களாக திருவிழா நடைபெற்றதாலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் உடனடியாக அகற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பான முறையில் தீயிட்டு கொளுத்தி அகற்றினர்.
நான்கு மாதங்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்திய கதண்டு கூட்டை அகற்றிய பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர். கதண்டு கூட்டை அகற்ற காரணமாக இருந்த அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கும், ஜெகதாப்பட்டினம் தீயணைப்புத் துறையினருக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
No comments