• Breaking News

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

     


    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அல்தாப் தாசின் என்பவரிடம் சீட்டு பணம் கட்டியுள்ளார். இதற்காக அந்தப் பெண் தன்னுடைய நிலத்தை விற்று  15 லட்ச ரூபாய் வரை சீட்டு பணம் கட்டியுள்ளார். அதோடு அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சீட்டு பணம் கட்ட வைத்து மொத்தமாக ஒரு கோடியே 75 லட்ச ரூபாயை கட்டினார். 

    அந்த நிறுவனத்தினர் இளம்பெண்சேர்த்து விட்ட நபர்களுக்கு 40 லட்ச ரூபாய் வரையில் கொடுத்த நிலையில் மீதி பணத்தை அந்த பெண் கேட்டுள்ளார். இது தொடர்பாக அல்தாப் தாசினிடம் அந்தப் பெண் அடிக்கடி பணத்தை கேட்டு வந்ததால் வேலூருக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். அதை நம்பி அந்த இளம் பெண் வேலூர் சென்ற நிலையில் பொது இடத்தில் வைத்து பணம் தந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் ஒரு விடுதிக்கு  வருமாறு அழைத்துள்ளனர். இதை நம்பி அந்த பெண்ணும் அவருடைய தாயாரும் அங்கு சென்ற நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் அங்கு  இருந்துள்ளனர்.

    அவர்கள் இளம்பெண்ணிடம் பணத்தை திரும்ப கேட்க கூடாது எனவும் மீறி கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் தாயை வேறொரு இடத்திற்கு அழைத்து சென்று விட்டு அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

     பின்னர் அல்தாப் தாசின், மகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நிர்வாணமாக ஆடைகளை கலைந்து வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அந்த பெண்ணை அவர்கள் மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்   கடந்த மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில் தற்போது 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    No comments