• Breaking News

    சத்திய பிரமாணத்தை மீறிய சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவருக்கு அபராதம்

     


    சிங்கப்பூர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பிரீத்தம் சிங். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது கட்சிக்கு பார்லிமென்டில் பத்து உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ரேஷா கான். அவர் 2021ம் ஆண்டு பார்லியில் பேசும்போது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் தவறாக நடந்து கொண்டதை நான் பார்த்தேன் என்று தெரிவித்தார். பின்னர் நடந்த விசாரணையில், அவர் கூறியது பொய் என்று தெரியவந்தது. ரேஷா கான் தன் தவறை ஒப்புக்கொண்டார்.

    இதற்கென அவருக்கு 35 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. தன் கட்சியிலிருந்தும், எம்.பி., பதவியில் இருந்தும் ரேஷா கான் ராஜினாமா செய்தார். இது தொடர்பான பார்லி குழு விசாரணையின் போது, பிரீத்தம் சிங் உட்பட கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தான் கூறியது பொய் என்று தெரியும். அப்படி இருந்தும், நான் கூறியதையே திரும்ப வலியுறுத்தும்படி என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்' என்று கூறினார்.

    ஆனால் ரேஷா கான் இப்படி கூறியதை, பிரீத்தம் சிங் மறுத்தார். இதை விசாரித்த பார்லி குழு, எதிர்க்கட்சித் தலைவரான பிரீத்தம் சிங், நாட்டுக்கு உண்மையாக இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை நடத்தும்படி பப்ளிக் ப்ராஸிக்யூட்டருக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'எதிர்க்கட்சித் தலைவர் பிரீத்தம் சிங், சத்திய பிரமாணத்தை மீறி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக' தெரிவித்தார்.

    அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏழாயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் வரும் நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அந்த நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்கப்பூர் அரசியல் சட்டத்தின் படி, பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டவர். ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது; ஏற்கனவே எம்.பி.யாக இருந்தாலும் அவர் பதவி இழந்து விடுவார். தற்போதைய தீர்ப்பின் படி, பிரீத்தம் சிங் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனினும் இந்த தீர்ப்பானது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கருதப்படுகிறது.

    No comments