மயிலாடுதுறை: நெப்பத்தூர் கிராமத்தில் சோலார் பவர் பிளாண்ட் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக கிராமமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரைடு வோட்டர்ஸ் பாரத் என்ற தனியார் நிறுவனம் சோலார் பிளாண்ட் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்றும்,இத்திட்டத்தால் விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அப்போது கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சோலார் பிளாண்ட் நிர்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும்.கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு சோலார் திட்டத்தை தொடரக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
கிராமமக்களின் நிலைப்பாட்டில் தற்போதும் மாற்றம் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன்,ராஜ்குமார், பால்ராஜ் ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் நெப்பத்தூரில் ஒருவாரம் கையெழுத்து இயக்கம் நடத்தி 1500 பேரிடம் கையெழுத்து பெற்று அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.கிராமக்களின் எதிர்ப்பை மீறி அங்கு பவர் பிளான்ட் அமைக்கும் பணிகள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
No comments