• Breaking News

    தங்கச்சி காளியம்மாள் தாராளமாக செல்லலாம்.... சீமான்

     


    நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று கூட நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டபோது விரைவில் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

     சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது பற்றிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எங்க கட்சியில் அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கும் நிலையில் தொடர்ந்து இயக்கத்தில் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

    கட்சியில் சேர்வதற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளராக தான் காளியம்மாள் இருந்தார். நாங்கள் தான் அவர்களை கட்சிக்குள் அழைத்து வந்தோம். தற்போது என் தங்கச்சி காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்று விரும்பினால் தாராளமாக விலகி வேறொரு கட்சியில் இணைந்து கொள்ளலாம். பொதுவாக கிளை உதிர் காலம் என்ற ஒரு காலம் இருக்கும் நிலையில் இது எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம். 

     இப்போது நீங்கள் எல்லோரும் கட்சியில் இருந்து விலகுவதற்கு காரணம் கேட்டு பேட்டி போடுவதால் அனைவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்கிறார்கள். மேலும் எங்கள் கட்சியில் யாராவது வந்தால் வாங்க என்று வரவேற்போம் அதுவே போகிறோம் என்று சொன்னால் நன்றி போயிட்டு வாங்க வாழ்த்துக்கள் என்று சொல்லுவோம் என்று கூறினார்.

    No comments