• Breaking News

    தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.... பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்


    தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசசனம் செய்தனர்.

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.  காலை 8.45. மணிக்கு விசேஷ பூஜைகளும், தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு நிகழ்ச்சியாக ஊட்டி, திருக்குந்தசப்பை படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனமும், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து  அங்குள்ள  ஆதிநாராயணன்- சந்திரலீலா நினைவு நூலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களுர் பொறியியல் விஞ்ஞானி தனசீலன், ஆன்மீக எழுத்தாள் நித்திய கல்யாணி ஆகியோர் பங்கேற்று பல்வகை தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து வழிகாட்டுதல், ஊக்கஉரை ஆற்றினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து  முத்துமாலைபுரம் ஆதிநாராயணன்- சந்திரலீலா நினைவு இலவச படிப்பக மாணவ, மாணவிகளின் சிறப்பு கலை நிகழ்ச்சியும், மாலையில் சரவண ஜோதி பூஜையும், இரவு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பாவூர்சத்திரம்,சுரண்டை, தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    காலை 7.45 மணி முதல் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை   60 ஆண்டுகள் கடந்து இறைப்பணி செய்து வரும் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

    No comments