மானங்கெட்டவர்களே முதலில் ரூபாய் நோட்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழித்து பாருங்கள்..... ஹெச்.ராஜா விளாசல்
தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான 2000 கோடி நிதியை விடுவிக்க மறுத்துவிட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் வலுக்கட்டாயமாக ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள் என்று மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு தபால் நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் பெயர் பலகைகளில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை பூசி அழித்து வருகிறார்கள். இதற்கு தற்போது பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நீங்கள் முதலில் ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால் வேளச்சேரியில் உள்ள சன் சைன் ஸ்கூலுக்கு போகணும். திமுகவில் ஒருவராவது உப்பு போட்டு சோறு சாப்பிடுகிறவர்கள் இருந்தால் முதலில் அந்த ஸ்கூலுக்கு போங்க. திமுகவில் மொத்தம் 48 பேர் சிபிஎஸ்இ ஸ்கூல் நடத்துகிறார்கள். அந்தப் பள்ளிகளின் லிஸ்ட்டை நான் கொடுக்கிறேன். அந்த ஸ்கூலில் ஹிந்தி சொல்லிக் கொடுக்கலாமா. நீங்க அழிச்சிட்டு இருக்கறது மத்திய அரசின் நிர்வாகங்கள். உங்களை புடிச்சு உள்ள போடுறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது. முதலில் 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்தை அழிங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்.
மானங்கெட்டவர்களே முதலில் அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழித்து பாருங்கள். இது என்ன வெட்கம் கெட்ட செயல் இதை பார்த்துக்கொண்டு எப்படி திமுக தலைமை அமைதியாக இருக்கிறது. நான் திமுகவினரை பார்த்து கேட்கிறேன் நீங்கள் ஹிந்தி சமஸ்கிருதம் ஸ்கூல் நடத்துகிறீர்கள் அல்லவா உங்களுக்கு வெட்கமாக இல்லையா. ஆனா அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்க கூடாதா.? மேலும் பணக்கார குழந்தைகள் மட்டும் காசு கொடுத்து ஹிந்தி படிக்கலாம் ஏழை குழந்தைகள் மட்டும் படிக்கக் கூடாதா என்று கூறினார்.
No comments