• Breaking News

    தமிழக அரசின் ஆவணப்படம் எடுக்க கொக்கி போட்டு மின்சாரம் திருடிய அதிகாரிகள்

     


    தமிழ்நாட்டில் வரும் 2030க்குள் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் வரும் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படுமென தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. 

    அதன்படி 2024 - 25 ஆம் ஆண்டு ஒரு கான்கிரீட்  வீடு கட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் நிர்ணயம் செய்து மொத்தம் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    இது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் என்ற ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பு கும்மிடிப்பூண்டி, ஏ என் குப்பம், மாநெல்லூர், ஈகுவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல குண சித்திர நடிகை வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரத்தில் பங்கேற்று நடித்து வருகிறார்.


    கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பின் போது படப்பிடிப்புக்கு தேவையான மின்சாரம் ஆங்காங்கே அருகாமையில் உள்ள மின்கம்பங்களில் முறைகேடாத திருடப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    மின் திருட்டை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த இடத்தில் மின்சார திருட்டு  அரங்கேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக தமிழக அரசின் ஆவணப்படம் எடுக்க அரசு அதிகாரிகளே மின்சாரம் திருட துணை நிற்கும் சம்பவம் பேசு பொருளாகவே மாறியுள்ளது.

    No comments