திருநெல்வேலி: கார் பதிவு செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் லுத்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம், இவர் 2024 மார்ச் மாதம் இன்னோவா கார் வாகனத்தை வாங்கி, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பதிவு செய்து ஓட்டி வந்தார்.
சுரேஷ் பாக்கியம், நிரந்தர பதிவு செய்ய நண்பர் லாரன்ஸ் உதவியுடன் வாகன பதிவு சான்று கட்டணம், ஆயுள்கால வரி மற்றும் தாமத கட்டணம் என மொத்தம் ரூ.4,35,490 செலுத்தினார்.அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 22ம் தேதி வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஆய்வாளர் பெருமாளிடம் வாகன ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
ஆய்வாளர் பெருமாள், நிரந்தர பதிவு செய்து தர ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.மீண்டும் கடந்த ஜன.28ம் தேதி ஆய்வாளரை சந்தித்துள்ளார். அப்போது ஆய்வாளர் பெருமாள் அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.சுரேஷ் பாக்கியம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதும், லஞ்சத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக குறைத்துக் கொண்டார் பெருமாள்.
அதற்கு சுரேஷ் பாக்கியம், ரூ.10 ஆயிரம் தான் என்னிடம் இப்போது இருக்கிறது என்று கூறியுள்ளார்.அப்படி எனில் ரூ.5 ஆயிரத்தை நாளை வரும் போது கொடுக்கலாம். தற்போது இருக்கும் ரூ.10 ஆயிரத்தை கூகுள் பே மூலம் தான் சொல்லும் மொபைல் எண்ணுக்கு அனுப்பும்படி சொல்லி உள்ளார்.அதன்படி 10 ஆயிரம் ரூபாயை சுரேஷ் பாக்கியம் அனுப்பிவிட்டார்.
பாக்கி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் ஆர்சி புத்தகத்தை ரிலீஸ் செய்வேன் என்று கண்டிப்புடன் வாகன ஆய்வாளர் பெருமாள் கூறிவிட்டார்.இந்நிலையில் மீண்டும் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் பாக்கியம், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் தன் மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்து கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள், ஒரு வாரம் அலுவலகத்திற்கு வரவில்லை. அவர் அலுவலகத்துக்கு வந்ததும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments