• Breaking News

    நாகை: 100 நாள் வேலைக்கான 3 மாத கூலியை கேட்டு போராட்டம்

     


    நாகை அருகே பாங்கல் ஊராட்சியில் மூன்று மாத காலங்களாக 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவில்லையென தலையில் முக்காடு போட்டு, பணியை புறக்கணித்து "100 நாள் வேலை கொடு செய்த வேலைக்கு கூலி கொடு" என கோஷமிட்டபடி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக பாங்கல் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று பணியை புறக்கணித்துவிட்டு, சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பாஸ்கர் தலைமையில்  100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தலையில் முக்காடு போட்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். 

    100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து ஒவ்வொருவருக்கும் சுமார் 5000 ரூபாய் வரை சம்பள பாக்கி இதுவரை கிடைக்காத நிலையில் அன்றாட செலவுக்கு கூட போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருவதாகவும் மத்திய அரசு உடனடியாக வேலை செய்த சம்பளத்தை வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கான நிதியை முடக்காமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ கிளைச் செயலாளர் கே.எஸ்.ரமேஷ், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஐயப்பன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஷேஷாத்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    No comments