அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது என்றும் கூறினார்.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதெல்லாம் கிடையாது.எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் அரசியல் செய்து வருதாக தி.மு.க. கூறி வரும் நிலையில் தற்போது யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளன் கூறியிருப்பது மீண்டும் கூட்டணியில் புயலை கிளப்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
0 Comments