டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்கள்,அரசின் சலுகைகள் வேண்டாம்...... கிராம மக்கள் அறிவிப்பு

 


மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மேலூர் பகுதியிலுள்ள முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் கோவில் பகுதியில் இருந்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள மத்திய தபால் நிலையத்தை நோக்கி நேற்று முன்தினம் பேரணி சென்றனர்.

இந்த நிலையில், மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். அரிட்டாபட்டியில் உள்ள 820 மற்றும் நரசிங்கம்பட்டியில் உள்ள 444 கார்டுகள் என மொத்தம் 1,200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கொண்ட மக்கள் பொருட்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments