இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தலைவராக செயல்பட்ட தியாகி எஸ்.ஜி.முருகையன் கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பிறகு நாகை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய 46 வது ஆண்டு நினைவு தின வீர வணக்க நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தி, புகழ் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நிகழ்வில் செல்வம் பேசியதாவது., 'எஸ் ஜி எம் சித்தமல்லி கிராமத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறு,குறு விவசாயிகளுக்காக தன்னையே அர்ப்பணித்து, மாணவர் பெரு மன்றத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கட்சியின் பல்வேறு பணிகளை ஏற்று திறம்பட செயல்படுத்தினார்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு என்பது இல்லாத காலகட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஸ்ஜிஎம் கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியை திறம்பட செய்து மக்கள் தலைவனாக திகழ்ந்தார். மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை வரை சாலை வசதி இல்லாதபோது மக்களை திரட்டி சிரமதானம் அடிப்படையில் சாலை ஏற்படுத்தி கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று மக்கள் சேவையாற்றினார்.
நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சிறப்பாக சேவை செய்த அவரை சில சமூக விரோதிகள் 1979 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வெட்டி படுகொலை செய்தனர். அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழையூர் ஒன்றிய முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் அவருடைய தியாகத்தை போற்றி வீர வணக்கத்தை செலுத்துகிறோம்' என்று பேசினார்.
இந்நிகழ்வில் சிபிஐ ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் எடிட்டர் நாகை மாவட்ட நிருபர் ஜி. சக்ரவர்த்தி
0 Comments