கும்பமேளாவில் வலம் வரும் காந்தக்கண்ணழகி..... இணையத்தில் சக்கை போடு போடும் வீடியோக்கள், போட்டோக்கள்
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் காந்தக் கண்களுடன் இளம்பெண் ஒருவர் வலம் வருகிறார். அவரின் வீடியோவும், போட்டோவும் இணையத்தில் வைரலாக, அவர் எங்கே இருக்கிறார் என இளைஞர்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். இந்த மேளா பிப். 26ல் நிறைவு பெறுகிறது.
கும்பமேளாவில் இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். காரணம் அவரின் அழகும், காந்த கண்களுமே. மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர், பாசி மணி, ருத்ராட்சை மாலை விற்று வருகின்றனர்.
தற்போது கும்பமேளா நடைபெற்று வருவதால் தமது குடும்பத்துடன் அவர் பிரயாக்ராஜ் சென்று ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார். காந்த கண்களுடன், அழகு ஓவியமாக காட்சியளிக்கும் அவரின் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் சக்கை போடு போடுகின்றன.
காந்த கண்ணழகி, பிரவுன் ப்யூட்டி, கும்பமேளா மோனாலிசா என்று ஆளுக்கு ஒரு பெயர் வைத்து, அந்த இளம்பெண்ணை ட்ரோல் செய்கின்றனர். விழாவுக்கு வந்த பல வி.ஐ.பி.க்கள், யுடியூபர்கள் இவரை போட்டோ, வீடியோ எடுத்து இணையத்தை அதகளம் செய்திருக்கின்றனர். கும்பமேளாவை காட்டும் வட மாநில தொலைக்காட்சிகள் அனைத்தும் இவரையும் சேர்த்தே காட்டுகின்றன.
கும்பமேளாவில் ஏக பிரபலமான அவரின் பெயர் மோனாலிசா போன்ஸ்லே. வறுமை காரணமாக ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார். வீடியோக்கள் வைரலான போது மகிழ்ச்சியில் இருந்த மோனாலிசாவும், அவரது குடும்பத்தினரும் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.காரணம்... அவரின் காந்தம் போன்ற கண்கள், அழகு ஆகியவற்றை பார்த்து மெய் மறக்கும் இளைஞர்கள் பட்டாளம் எப்போதும் அவர் பின்னாலேயே வலம் வர ஆரம்பித்துவிட்டது. மோனாலிசா எங்கு சென்றாலும் இளவட்டங்கள் அவரை வட்டமிடுகின்றன.
இதனால் தமது தொழிலை பார்க்க முடியாமல் உள்ளதாக மோனாலிசா குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டு இருக்கின்றனர். அவரது தந்தை பெரும் வருத்தத்தில் உள்ளதாக கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;
வியாபாரம் அமோகமாக நடக்கும் என்று தான் இங்கு அழைத்து வந்தேன். ஆனால் நிலைமையே மாறிவிட்டது. மோனாலிசாவை சுற்றி, சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் வலம் வருகிறது. வீடியோ எடுக்கின்றனர், போட்டோ எடுக்கின்றனர்.
கும்பமேளாவில் வருமானம் கிடைக்கும் என எண்ணி ஏராளமான பொருட்களை வாங்கி இங்கே கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் எங்களால் வியாபாரமே செய்ய முடியவில்லை. மகளை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று யோசிக்கிறேன்.
இவ்வாறு மோனாலிசா தந்தை கூறி இருக்கிறார். அழகால் ஆபத்து, அதுவே காரணம் என்று மோனாலிசாவை விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவருக்கு சினிமாவில் வாய்ப்பு ஒன்றும் தேடி வந்திருக்கிறது.
பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ரா என்பவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். தமது அடுத்த படத்தில் முக்கிய வேடம் தருவதாகவும் கூறி உள்ளார்.
No comments