மும்பை பந்த்ராவில் பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதி வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். இதை பார்த்த நடிகர் சயிப் அலிகானை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சயிப் அலிகானுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவர் கூறுகையில், 'அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளத. அதில், 2 இடங்களில் பலத்த காயமாகும். முதுகு எலும்பு பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது', என்றார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் ஹிந்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் சயிப் அலி கான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு ஆவார். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். தாயார் பிரபல நடிகை சர்மிளா தாகூர்.
0 Comments