வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களை அழிக்காதீர்கள்..... பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.
அவர் பரந்தூர் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட மாட்டாது எனவும் அதற்கு சட்டப்படி என்ன போராட்டங்களை முன்னெடுக்க முடியுமா அத்தனை போராட்டங்களையும் முன்னெடுத்து உங்களுக்கு துணையாக நான் நிற்பேன் என்று உறுதி கொடுத்துள்ளார்.இது பற்றி விஜய் பேசியதாவது, என்னுடைய கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து தான் தொடங்குகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவான முடிவையும் ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் ஆளும் அரசு எடுக்கிறது. இனியும் பொங்கல் நாடகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக்கூடாது என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இந்த இடத்தில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் நான் சொல்கிறேன். வளர்ச்சி முக்கியம்தான்.
அதற்காக வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களை அழிக்காதீர்கள். விமான நிலையத்தை விவசாய நிலங்கள் இல்லாத வேறு இடத்தில் அமையுங்கள். நான் உங்களுக்கு எப்போதும் துணையாக நிற்பேன். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த இடத்தில் ஏர்போர்ட் வேண்டாம் வேறு இடத்தில் அமையுங்கள்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகள் அழிக்கப்பட்டது தான் காரணம் என்று ஆய்வுகள் கூறுகிறது.இப்படி இருக்கும்போது 90% நீர்நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இது மக்கள் விரோத அரசாகத்தான் கண்டிப்பாக இருக்கும். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த நிலைப்பாட்டை நான் முழுமையாக வரவேற்கிறேன். மேலும் அதே போன்ற ஒரு முடிவை தான் தற்போது இந்த விஷயத்திலும் எடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
No comments