கவர்னர் உரை மாறிப்போய், சபாநாயகர் உரையாக மாறி விட்டது - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

 


அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். யார் அந்த சார் என்ற சட்டையை அணிந்தபடி வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், பதாகைகளுடன் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: கஞ்சா போதையினால் இன்று இளம் வயதினர் கடுமையாக பாதிக்கின்றனர். இந்த கஞ்சா போதையினால் தான் சிறுமிகள், பெண்கள், வயதான பாட்டிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இது மிக மிகவும் கேவலமானது, வெட்கக்கேடானது.

இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், கவர்னர் உரை மாறிப்போய், சபாநாயகர் உரையாக மாறி விட்டது. இந்த உரையானது பார்ப்பதற்கு காற்றடித்த பலூனைப் போல் பெரிதாக இருக்கிறதே தவிர, உள்ளே ஏதும் இல்லை. இந்த உரையில் தி.மு.க., அரசு சுய விளம்பரத்தை தேடிக் கொள்கிறது.அண்ணா பல்கலை சம்பவம் போன்று இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் பதாகைகளை எடுத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். யார் அந்த சார், ஏன் இந்த அரசு பதற்றப்படுகிறது. யார் அந்த சார் என்று கேட்டால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.இன்றைக்கு பாலியல் வன்கொடுமைக்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் இந்த அரசின் கடமை. ஆனால், யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பது தான் மக்களின் சந்தேகம். அதனால் தான், ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யார் அந்த சார் என்று கேட்கும் அளவுக்கு மக்களின் குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது.

உரையை கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை. திட்டமிட்டு, கவர்னர் உரை நிகழ்த்தக் கூடாது என்பதற்காக இதுபோன்று செய்துள்ளார்கள். தேசிய கீதம் இசைக்கப்படுவதில், வழக்கமான நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க., அரசின் அவலங்களை கவர்னரிடம் மனு கொடுத்தோம். அதன் மீதே இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணா பல்கலை மாணவி வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணையை எடுக்கவில்லை. அ.தி.மு.க., பெண் நிர்வாகி தாக்கல் செய்த ரிட் மனுவின் காரணமாக, குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த அரசை நம்பி பலன் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments