திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என்ற யானைகளுக்கு என தனியாக 10 ஏக்கர் நிலம் கொள்ளிடம் ஆற்றின் கரையிலோ அல்லது தகுந்த இடத்தில் ஒதுக்கி யானைகளை பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இதுதொடர்பாக யானைகள் எதுவும் உங்களிடம் புகார் அளித்ததா என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த வழக்கை தொடர தங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், நேர்மையான முறையில் தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன் என்று தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது வனத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் சீனிவாசன் மற்றும் சாதீக் ஆகியோரும், ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராமும் ஆஜராகியிருந்தனர்.
இதையடுத்து, மனுதாரரின் பின்னணி குறித்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
0 Comments