வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.இதனால் மன அழுத்தத்தில் இருந்த மணிகண்டன் திடீரென நேற்று முன்தினம் மாலை தனது அறையில் விஷ ஊசி ஒன்றை போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. தனது அறையை பூட்டியவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், உறவினர்கள் சந்தேகத்தில் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மணிகண்டன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவரை அருகில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மணிகண்டனின் தந்தை ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments