• Breaking News

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பணிக்காலத்தை இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யக்கூடாது..... அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் ஆளுநருக்கு வேண்டுகோள்.....


    இது குறித்து அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்:-

     திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் பணிக்காலத்தை இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யக்கூடாது. அப்படி செய்வது பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.  தற்போதுள்ள துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் மோசமான நிர்வாகம், நிதி முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் எழுப்பிய நிதி முறைகேடு பிரச்சினைகள் இன்றளவும் தீர்க்கப்படாமல் உள்ளன.

    கிராமப்புற, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை படிப்பதற்கு தடையாக ஆராய்ச்சி பிரிவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலத்தில் செனட் போன்ற முக்கிய அமைப்புகளின் பங்கு புறக்கணிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்குவதில் துணைவேந்தர் பாரபட்சமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து ஆசிரியர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

    முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் மாநில தலைவர் அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

     இயக்குநர், தேர்வு நெறியாளர், பதிவாளர் போன்ற அனைத்து நிர்வாக பதவிகளை நிரந்தர படுத்தாமல் பொறுப்பு பதவியாகவே  வைத்திருந்தார். இது பல்கலைக்கழக நிர்வாகத்தை முற்றிலும் சிதைத்துள்ளது. தற்போதைய துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களை விட தகுதியான, தரமான, திறமையான பல கல்வியாளர்கள் துணைவேந்தர் பொறுப்புக்கு இருக்கும்போது  செல்வத்திற்கு முதல்முறையாக பணி நீட்டிப்பு வழங்கியதே கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இவரது பணிக்காலத்தில் எந்த ஒரு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளும் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை. 

    இவரின் பதவிக்காலத்தை இரண்டாவது முறையாக  நீட்டிப்பு செய்வது பல்கலைக்கழகத்தை படுகுழிக்குள் தள்ளுவதற்கு சமமாகும். ஆகவே,  செல்வத்தின் பதவிக்காலத்தை இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யக்கூடாது என மேதகு தமிழக ஆளுநர் அவர்களை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    No comments