சென்னையில் கடந்த 10ம் தேதி (ஜன) பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாக கூறியிருந்தார்.
அவரின் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறி இருந்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழக அரசின் நிலையை கண்டித்து போராட்டமும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மதுரை தூத்துக்குடி ரயில்வே திட்டத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் நிருபர்கள் பல கேள்விகள் கேட்டனர். பேட்டி நடந்த ரயில்வே பணிமனையில் ஒரே இரைச்சல் ஆகவும் இருந்தது.
அப்போது மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதிக இரைச்சல் எதிரொலியாக, அந்த திட்டம் தனுஷ்கோடி ரயில் திட்டம் தொடர்பான கேள்வியாக அமைச்சர் எண்ணினார். ஆகவே அதற்கான பதிலைத் தான் அமைச்சர் கூறினார். நிலம் ஒதுக்கீடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக தமிழக அரசு கைவிடலாம் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக கூறியதாக தெரிவித்தார்.
அவர் அளித்த பதிலை கேள்வி கேட்ட நிருபர்கள், மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிடுவதாக எடுத்துக் கொண்டனர். மதுரை- தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.தமிழக அரசு கைவிடும் படி கேட்டுக் கொண்டது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் தொடர்பு பிழை என்பது தொழிற்சாலையில் இயந்திரங்களின் இரைச்சல் காரணமாக நிகழ்ந்தது.
இவ்வாறு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
0 Comments