சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் குறுகலான சாலையை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் காலங்களில் குறுகிய சாலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சிறுவாபுரி கிராமத்திற்கு செல்லும் ஒருவழிபாதையான உட்புற சாலையை விரிவுபடுத்தி தர வேண்டுமென பக்தர்கள் தொடர் கோரிக்கை வைத்து வைக்கின்றனர். இந்நிலையில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உட்புற சாலையில் இருந்து மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து வரைபடங்களுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தனர். சுமார் 4.6 கிமீ சாலை பணிகளுக்காக 12 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அறநிலையத்துறை வழங்கும் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6மாதங்களில் உட்புற சாலையை விரிவுபடுத்தி 4வழிச்சாலை அமைக்கும் பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே உள்ள சாலை 7 முதல் 11 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதாகவும், 32மீட்டர் அகலத்திற்கு சாலையை விரிவுபடுத்தபட உள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்தார்.
வெளியூர், வெளி மாவட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் பக்தர்களின் வசதிக்காக சாலை விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். தற்போதைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் தரமானதாக அமைக்கப்பட்டு வருவதாகவும், சென்சார் பேவர் கொண்ட சாலைகள் மட்டுமே தற்போது அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தரக்கட்டுப்பாடு என நெடுஞ்சாலை துறையில் தனிப்பிரிவை உருவாக்கி நேரடியாக சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்து தரம் இல்லாத சாலையை போடும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி, அதனை தோண்டி எடுத்து மீண்டும் தரமானதாக அமைத்திட அறிவுறுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பிரத்யேகமாக நெடுஞ்சாலைத்துறைக்கு என செயலி உருவாக்கி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 48மணி நேரம், 72 மணி நேரம் என நிர்ணயித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு 100ஆண்டுகள், 1000ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்கள் என பழமை வாய்ந்த கோவில்களை புனரமைக்க பல்வேறு விதிகள் உள்ளதாகவும், அவற்றை எல்லாம் ஆய்வு செய்து வருவதாகவும், பல கோவில்களில் வருமானம் இல்லாமல் நித்திய பணிகள் கூட செய்ய முடியாத சூழல் நீடித்து வருவதாக தெரிவித்தார்.
தற்போது முதலமைச்சர் 1000ஆண்டுகள் பழமையான கோவில்களுக்கு ஆண்டிற்கு 100கோடி ரூபாய் என 300 கோடி ரூபாயில் 507 கோவில்களில் பணிகள் தொடங்கி 37 கோவில்களில் குடமுழுக்கு முடிந்துள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக இணை ஆணையர் நியமனம் செய்துள்ள நிலையில் தொடர் ஆய்வு நடத்தி திருக்கோவில்களில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தகவல் கொடுப்பதாகவும், ஏற்கனவே ஆய்வு செய்த கோவிகளில் புனரமைப்பு பணிகள் தாமதம் ஆகி வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே நடிகர் விஜய் தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்க மறுத்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து சிறுவாபுரி முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கோவிலுக்கு உள்ளே கூட செல்லாமல் தனது காரிலேயே அமர்ந்திருந்து அமைச்சர் சேகர்பாபு தரிசனம் முடித்து வந்ததும் அவரை அழைத்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கோயில் செயல் அலுவலர் பிரகாஷ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வ சேகரன் பொதுக்குழு உறுப்பினர் , பா.செ. குணசேகரன்,ஆரணி நகர செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் கா.சு ஜெகதீசன் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் சிறுவாபுரி ரமேஷ் ,தனாபிரபு, மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments