திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழுந்து மரணம் அடைவதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.காவல்துறை,வருவாய்த்துறை,கடலோர காவல் படை,மீனவ கிராம நிர்வாகிகள்,சமூக அமைப்புகள் இணைந்து ஆலோசனையில் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தீபாவளி,கிறிஸ்துமஸ்,பொங்கல், புத்தாண்டு மற்றும் ரம்ஜான் போன்ற விழா நாட்களின் போது பழவேற்காடு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் தவறி விழுந்து மரணம் அடைந்து வருகின்றனர்.
கடந்த 2025 புத்தாண்டு தினத்தின் போது இரண்டு பேர் பழவேற்காடு கடலில் குளிக்க வந்து தண்ணீரில் தவறி விழுந்து மரணம் அடைந்தனர்.இது குறித்து அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் வருத்தம் அடைந்து இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்ய முடிவு எடுத்தனர்.
அதன்படி பழவேற்காடு சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சமூக சேவை மைய கூட்ட அரங்கில் பழவேற்காடு கடலில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மரணத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் மனோவா செபாஸ்டின், தமிழ்நாடு கடலோர காவல்படை திருவள்ளூர் மாவட்ட உதவி ஆய்வாளர் சபாபதி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் துறையினர்,பழவேற்காட்டில் இயங்கி வரும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மீனவ சங்கங்கள்,மீனவ சங்கங்களின் பெண் பிரதிநிதிகள் மற்றும் மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக விழா நாட்களில் பொதுமக்கள் கூடும் பழவேற்காடு கடற்கரையில் விழா காலங்களில் கடற்கரையில் நுழைவதற்கு இடங்களை வரையறுத்து காவல் கண்காணிப்பு பகுதிகளை ஏற்படுத்தி மீனவர் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் விபத்தினை தடுக்கும் விதத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும்,கடலில் ஏற்படும் விபத்து குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
படகு சவாரியை முறைப்படுத்தி இயக்க வேண்டும் எனவும்,காணும் பொங்கலை முன்னிட்டு அதிக கூட்டங்கள் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
தற்காலிக பாதுகாப்பு பணிகள் மற்றும் நீண்ட கால சுற்றுலா பணிகளுக்கான மேம்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.வருகின்ற நாட்களில் எந்த ஒரு உயிரிழப்பும் பழவேற்காடு கடற்கரையில் நடக்க கூடாது எனவும் அதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி,லைட் ஹவுஸ் ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான்,தாங்கல் பெருங்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க தலைவர் எத்திராஜ், தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் துரை. மகேந்திரன்,பழவேற்காடு மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் துரைராஜ், டாக்டர் அம்பேத்கலாம் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் அசோக் பிரியதர்ஷன், அட்சுவா திட்ட ஒருங்கிணைப்பாளர் லல்லி பாலாஜி,உறவு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மஞ்சு,அதானி பவுண்டேஷன் லீமா, இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் ஏகாட்சரம்,ஆர்.டி.பவுண்டேஷன் சுமன்,சென்டம் பவுண்டேசன் ஜெகன்,சத்யம் கல்வி ஆதார அறக்கட்டளை நிர்வாகி சுகுணா சாலமன்,மகளிர் அமைப்பு நிர்வாகிகள் ராஜலட்சுமி,செல்வாம்பிகை, சமூகம் சார்ந்த கிராம புற மேம்பாட்டு அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் கூனங்குப்பம்,அரங்கம் குப்பம்,சாட்டாங்குப்பம்,திருமலை நகர்,எஸ்.பி.குப்பம்,வைரவன் குப்பம்,நடுக்குப்பம்,கரிமணல் கிராம நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments