அறந்தாங்கி அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஆவுடையார்கோவில் காவல் நிலையமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் பிரதிபலிப்பான் ஒட்டும் முகாம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு ) முனைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படி நடைபெற்றது. ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் கெளரி வழிகாட்டுதல்படி, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் தொடங்கி வைத்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவ, மாணவியரிடையே விளக்கிப் பேசினார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள பதாகைகளை தாங்கியபடி, அவற்றை முழக்கமிட்டவாறு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் ஆவுடையார்கோவில் காவல் நிலையம் தொடங்கி நான்கு வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்பொழுது 100க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பிரதிபலிப்பான்களையும் ஒட்டினர். நிறைவாகப் பேரணி மீண்டும் காவல் நிலையத்திலேயே நிறைவு பெற்றது. பேரணியில் காவல் நிலைய தலைமைக் காவலர் சேக் அன்சாரி, இருபால் காவலர்கள், கல்லூரி வணிகவியல் துறை விரிவுரையாளர் பாலமுருகன், ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சிவனேசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாகக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத் துறைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
No comments