பீகார் மாநிலத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் தேர்வு பயிற்சி மையங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தில் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இணைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனை அடுத்து பீகார் அரசு தேர்வின் முறைகேடுகளை கண்டித்தும், தேர்வை ரத்து செய்ய கோரியும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனால் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜனவரி மாதம் 2ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே காந்தி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்ததை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும் ஜாமினில் பிரசாந்த் கிஷோர் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை பிரசாந்த் கிஷோர் நீரழிவு மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பாட்னாவில் மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனால் திரவ முறையில் நரம்பு மூலமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 Comments