விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை, கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து, ஆந்திரா பல்கலை மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார்.திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி பிரதமர் மோடியை, சாலைகளின் இருபுறங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்லையும் நாட்ட இருக்கிறார். விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள புடிமடகாவில் ரூ.18,500 கோடி மதிப்பிலான நேஷனல் க்ரீன் எனர்ஜி ஹைட்ரோஜன் திட்ட மையத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த மையம் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாகும்.
அதுமட்டுமில்லாமல், பலகோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, 19,500 கோடி ரூபாயிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்ட இருக்கிறார். சுகாதாரத்துறையின் சார்பில், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நாக்கபள்ளியில் டிரக் பார்க்கை கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். அதேபோல, திருப்பதியில் உள்ள கிருஷ்ணபட்டினம் தொழிற்பேட்டையில் ரூ.10,500 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம், ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும்.
0 Comments