• Breaking News

    புதுகை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிவேக இரு சக்கர ஓட்டிகளால் தொடரும் விபத்துக்கள்..... நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


    புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிவேகமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைத்தெருக்களில் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்தப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடிய இளைஞர்கள் அதிகமான வேகத்தில் செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் பல உயிரிழப்புகளும்,   கை, கால் எலும்பு முறிவுகளுடன் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. இன்னும் அதிகமானோர் மது போதையில் வாகனத்தை ஓட்டுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து செல்கின்றனர். 

    இது போன்ற வாகன ஓட்டிகளால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தற்போது தை மாதம் பிறந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பொதுமக்கள் சாலையில் பயணிப்பதால் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே இது போன்ற முகூர்த்த நாட்களில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லக்கூடியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    மேலும் காலை, மாலையில் பள்ளிக்கூடம் சென்றுவரும் மாணவ மாணவிகள்  சாலையை கடப்பதற்கு அதிவேக இரு சக்கர வாகன ஓட்டிகளால் அச்சப்படுகின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும் எனவும், கடைத்தெருக்களில் சாலையோரங்களில் அதிகமான வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும், சாலைகளை சுற்றித் திரியும் நாய், மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், சாலையோர வேலிக்கருவை மரங்களை அகற்ற வேண்டும் எனவும், விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments