• Breaking News

    சட்ட விரோத பணப் பரிமாற்றம்.... அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய கதிர் ஆனந்த்

     


    அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த், 50 மீது, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்க உள்ளதாக புகார் எழுந்தது.

    அப்போது, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, வேலுாரில், துரைமுருகனின் வலது கரமான பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் வேலுாரில் உள்ள சிமென்ட் கிடங்கில், 11.51கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அந்த பணம் கதிர் ஆனந்திற்கு சொந்தமானது என, தெரியவந்தது.

    இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன் அடிப்படையில், கடந்த 3ம் தேதி, வேலுாரில், கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரியில் சோதனை நடத்தி, 13.82 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.மேலும், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என, கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பினார்.

    அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் தன் உதவியாளர் இருவருடன், நேற்று காலை, 10:30 மணியளவில் கதிர் ஆனந்த் ஆஜரானார். 11:00 மணியளவில் விசாரணை துவங்கியது.ஒரு மணி நேரம் மட்டுமே உதவியாளர்கள் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். பின், இருவரும் விசாரணை அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.தனி அறையில், இரவு 7:00 மணி வரை, கதிர் ஆனந்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    'பூஞ்சோலை சீனிவாசன் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தான். ஆனால், அவரது வீட்டில் இருந்து நீங்கள் பறிமுதல் செய்ததாக கூறும், 11.51 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்த பணம் என்னுடையதும் இல்லை' என, கதிர் ஆனந்த் கூறியுள்ளார்.

    ஆனால், இந்த பணம் தொடர்பாக, கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோருக்கும் இடையே நடந்த உரையாடல்கள், பணப் பரிமாற்றம் குறித்த ஆதாரங்களை காட்டி, அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர். இக்கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், கதிர் ஆனந்த் திணறி உள்ளார்.

    தந்தை துரைமுருகன், மனைவி சங்கீதா, மகள்கள் இலக்கியா, செந்தாமரை, மகன் இளவரசன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்கள் மதிப்பு குறித்து கேட்டபோது, 'சரியாக தெரியவில்லை. அதற்கான ஆவணங்களும் தற்போது என்னிடம் இல்லை' எனக் கூறியுள்ளார்.

    No comments