திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு.... அரசியல் தலைவர்கள் இரங்கல்

 


ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்றிருப்பது ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதேசியை  முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க சென்றபோது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 34 பேர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது கீழே விழுந்தவர்கள் மீது அங்கிருந்தவர்கள் ஏறி நடந்ததால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் இதற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலி ன் ஆகியோர் திருப்பதியில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பக்தர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திராவில் உள்ள திருப்பதியில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன்.

என்னுடைய எண்ணங்கள் நெருங்கிய மற்றும் உறவினர்களை இழந்த சொந்தங்களுடன் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியும் திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்ததோடு காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். திருப்பதி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments